ஆன்மீகம்பரிகாரங்கள்

அஷ்டமி, நவமி என்றால் என்ன ?

Astami - Navami

ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் நட்சத்திரங்கள், திதிக்கு ஏற்ப விரதம், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம், தை மாதம் தை அமாவாசை வருகின்றன. இந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே “நவராத்திரி “விழாவாகும். இது பராசக்திக்கு எடுக்கப்படும் விழா.

நவமி முடிந்தவுடன் அடுத்த நாள் வருவது தசமி. இந்த நாளை தேவி மகிசாசுரனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடியதால் விஜய தசமியாக நாம் கொண்டாடுகிறோம். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால் ‘தசரா ‘என்று அழைக்கிறோம். நவராத்திரியில் கடைசி மூன்று நாட்களான அஷ்டமி, நவமி, தசமி மிகவும் விசேஷமானது.

சாதாரணமாக நம் இல்லங்களில் நடக்கும் நல்ல காரியங்கள், விசேஷங்கள், முக்கிய நிகழ்ச்சிகளை அஷ்டமி, நவமியில் செய்ய மாட்டோம். அஷ்டமி, நவமி இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் தான்.

ராமர் பிறந்தது நவமி, கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமி. நவராத்திரியில் வரும் அஷ்டமி, நவமி இரு தினங்களும், ராமர்,கிருஷ்ணர் பிறந்த இரு தினங்களில் மட்டுமே கொண்டாடுகிறோம். இதை தவிர வரும் அஷ்டமி, நவமி நாட்களில் நாம் நல்ல காரியங்கள் செய்வது இல்லை.

அஷ்டமியில் பிறந்த காரணத்தால் கிருஷ்ணன் பல துன்பங்களை அனுபவித்தார். நவமியில் பிறந்த ராமன் நாட்டை இழந்து காட்டிற்கு சென்று, சீதையை பிரிந்து பல துன்பங்களை அனுபவித்தார். அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் செய்யவில்லை.

அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். அஷ்டமி திதியில் சரபேஸ்வரர், பைரவர், வராகி போன்றவர்களுக்கு பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படுகின்றன. காவல் தெய்வம், எல்லை தெய்வங்களுக்கு பூஜை செய்ய இந்த இரு திதிகளும் உகந்தது.

புராண வரலாறு

சூரிய சந்திரர்கள் தங்கள் பணியை செய்துவந்தனர். சிறிது காலம் சென்ற பிறகு சந்திரன் தன் கடமைகளைச் செய்வதில் அசட்டையாக இருந்து வந்தான். இதன் காரணமாக பூமியில் இருக்கும் உயிரினங்கள் தங்களுக்குச் சந்திரனிடம் இருந்து கிடைக்கவேண்டிய ஆற்றல்கள் கிடைக்காமல் மிகவும் சோர்ந்து போனார்கள்.

சந்திரனின் இந்தப் போக்கு சிவபெருமானுக்குத் தெரியவரவே அவர் சந்திரனை அழைத்து எச்சரித்தார். அப்போது மனோகாரகனான சந்திரன், ”ஐயனே, என்னை மன்னிக்கவேண்டும். தொடர்ந்து பணி செய்வதால், என் உடலும் மனமும் மிகவும் சோர்ந்து போகின்றன. எனவே, என் பணிக்காலத்தில் எனக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு தேவைப்படுகிறது. அப்போதுதான் என் பணிகளை நல்ல விதமாகச் செய்யமுடியும்” என்றான்.

சந்திரனிடம் இரக்கம் கொண்ட சிவபெருமான், சந்திரனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். அதன்படி சந்திரன் தன் பணிக்காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதித்தார். ஆனாலும், சந்திரனிடம் நம்பிக்கை இல்லாமல், சந்திரனின் பணிகளைப் பார்வை இடுவதற்காக சிலரை நியமிக்கவும் செய்தார். அவர்களுக்கான பணிக் காலத்தையும் நிர்ணயம் செய்தார். அவர்களே திதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வளர்பிறையில் சுபர்களாகவும், தேய்பிறையில் அசுபர்களாகவும் கருதப்படுகின்றனர்.

இதன்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் முழுநேரப் பணியும், ஒருநாள் முழுவதும் முழுநேர ஓய்வும் கிடைத்தது. சந்திரனின் முழுநேரப் பணிநாளை கவனிக்க பௌர்ணமி திதியும், முழுநேர ஓய்வின்போது சந்திரனின் ஓய்வுக்குத் தொந்தரவு வராமல் கவனித்துக்கொள்ள அமாவாசை திதியும் ஒதுக்கினார் சிவபெருமான்.

அமாவாசை என்னும் சந்திரனின் ஓய்வு நாளுக்குப் பிறகு சந்திரனின் வேலைகளை படிப்படியாக அதிகரிக்கும்படிச் செய்தார் சிவபெருமான். அந்த பதினான்கு நாள்களில் சந்திரனின் பணிகளை மேற்பார்வை செய்ய 14 பேர்களை நியமித்தார். அவர்களே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்னும் திதிகள் ஆவர். சந்திரனின் ஓய்வுக்குப் பிறகு வரும்போது இந்தத் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும், சந்திரனின் முழுநேரப் பணிக்குப் பிறகு இவர்கள் வரும்போது தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்தத் திதிகளில் பௌர்ணமி திதி, தனக்கு ஒருநாள் முழுக்க சந்திரனின் பணிகளை மேற்பார்வை இடும் பொறுப்பை கொடுத்துவிட்டதாகவும், அமாவாசை திதி, தனக்கு ஒருநாள் முழுவதும் சந்திரனின் ஓய்வுக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்து விட்டதாகவும் வருத்தப்பட்டன. இவர்களின் வருத்தம் இப்படி இருக்க, மற்ற 14 திதிகள் தங்களுக்கு வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு நாள்கள் பணியைக் கொடுத்துவிட்டதாக வருந்தின.

அவர்கள் அனைவரின் கவலையை அறிந்த சிவபெருமான், ”சந்திரனின் பணிகளை மேற்பார்வை இடும் நீங்கள் திதிகள் என்று அழைக்கப்படுவீர்கள். அனைத்து நற்செயல்களுக்கும் சங்கல்பம் செய்துகொள்ளும்போது உங்கள் பெயரும் கட்டாயம் சொல்லப்படும். காலக் கணக்கை நிர்ணயம் செய்வதில் நீங்களும் முக்கியத்துவம் பெறுவீர்கள். அதன்மூலம் உலகத்தில் உங்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டாகும்” என்று அனுக்கிரகம் செய்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் உலக மக்கள் அஷ்டமி மற்றும் நவமியை ஒதுக்கி வைக்கும்படியான நிலைமை அந்தத் திதிகளுக்கு ஏற்பட்டது. காரணம், திதிகளின் கடமை மற்றும் அவைகளின் பெருமை ஆகியவற்றைப் பற்றி சிவபெருமான் விளக்கிக் கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டன. அவைகளின் அசட்டையைப் பார்த்த சிவபெருமான், ”என் வார்த்தைகளை கவனிக்காமல் இருந்த உங்கள் இரண்டுபேரையும் ஒதுக்கி வைப்பார்கள். உங்களுடைய நாள்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள்” என்று சாபம் கொடுத்து விட்டார்.

அஷ்டமியும் நவமியும் தங்கள் தவற்றினை உணர்ந்து, தங்களை மன்னிக்கும்படி பிரார்த்தித்தன. அவைகளிடம் இரக்கம் கொண்ட சிவபெருமான், ”நான் கொடுத்த சாபத்தில் இருந்து நான் மீறமுடியாது. ஆனால், நீங்கள் இருவரும் விஷ்ணுமூர்த்தியிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு வேறுவிதத்தில் நல்ல பலன் கிடைக்கலாம்” என்று கூறினார்.

அந்தத் திதிகளும் அப்படியே விஷ்ணுவிடம் சென்று பிரார்த்தித்தன. அவைகளின் குறையைத் தீர்க்கவே, விஷ்ணு அஷ்டமியில் கண்ணனாகவும், நவமியில் ராமனாகவும் அவதரித்து, அஷ்டமி, நவமி திதிகளுக்குப் பெருமை சேர்த்து அருள்புரிந்தார்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button