திருவிழாக்கள்

கார்த்திகை மாத தீபத் திருவிழா

கார்த்திகை விளக்கு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும். பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

ஆதி காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் அக்கினியை தெய்வமாக வழிப்பட்டு வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் பெரும் பாலான பண்டிகைகளை நாம் தீபங்களை ஏற்றி கொண்டாடி வருகிறோம். கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களையும் திருப்தி செய்வதுதான் இந்த பண்டிகையின் நோக்கமாகும். அதாவது, கிளியான் சட்டியில் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. களிமண் அகல் விளக்குகள் மண் கொண்டு நீர் ஊற்றி, காயவைத்து, நெருப்பில் சுட்டெடுத்து செய்யப்படுகிறது.

இந்த அகல் விளக்குகளை வாங்கி விளக்கு ஏற்றுவதால் ஒரு ஏழை தொழிலாளி வாழ நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். ஆகையால் அகல் விளக்குகளை வாங்கி கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம். எத்தனையோ தீபங்கள் விற்பனைக்கு இருந்தாலும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மிகவும் அழகுதான். கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் கடைசி தேதி வரை இந்துக்கள் தினமும் மாலையில் வீடுகளிலும் ,ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்து கொண்டாடுவர். தினமும் விளக்கு ஏற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தி, பெளர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

ஆண்டுதோறும் திருவண்ணா மலையில் கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அடி முதல் முடி வரை சிவபெருமான் ஜோதி பிழம்பாக காட்சி அளித்ததை உணர்த்தும் விதமாக கார்த்திகை தீபம் அமைந்துள்ளது. மற்றுமொரு காரணம்,கார்த்திகை பெண்களை போற்றும் நாளாக திருகார்த்திகை விளங்குகிறது. தீபம் ஏற்றி வழிபடுவதால் முப்பெரும் தேவியரது அருள் நமக்கு கிடைக்கும்.

பொருள், புகழ் அனைத்தும் இருக்கும். ஆனால், மன நிம்மதி இருக்காது.ஜென்ம ஜென்மங்களுக்கும் நாம் செய்த பாவங்களே மனநிம்மதி இல்லாமைக்கு காரணம். ஜென்மாந்திர பாவங்கள் போக தொங்கும் சர விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நாரதர், கார்த்திகை விரதத்தை 12 ஆண்டுகள் கடைபிடித்து, சப்த ரிஷிகளுக்கும் மேலான பலன்களை பெற்றார். திரிசங்கு மன்னன், பகீரதன் இந்த விரதத்தை மேற்கொண்டதால் பேரரசன் ஆனார்கள்.

தீபம் ஏற்றினால் எல்லா தீவினைகளும் விலகும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை தீபம் அன்று தீபதானம் செய்வது மிகவும் நல்லது.வெள்ளி, வெண்கலம், பித்தளை ஆகிய ஏதாவது ஒன்றினை ஏற்றி, தீபதானம் செய்ய வேண்டும். வஸ்திர தானம் பித்ரு தோஷம் நீக்கும்.

ஐதீகம்

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு (ஐதீகம்)ஆகும்.

விரதம் இருக்கும் முறை

முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

வீடுகளை அலங்கரிக்கும் முறை

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரம்

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

புராணக் கதை

முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். திரிபுராசுரர் என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்மனை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர்.

சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது’ என்றார் பிரம்மா. அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர்.

வரம் பெற்ற அசுரர்களின் கர்வம் தலைக்கேறியது. திரிபுரங்களைக்கொண்டு நாடு, நகரம், பயிர், வயல், கோபுரம் என்று பாராமல் அனைத்தையும் அழித்தனர். மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களைவதன்பொருட்டு, பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் ஈசன்.

திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அரக்கர்களும் கார்த்திகைப் பவுர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அந்த நாளே திருகார்த்திகை தீப நாளாக கொண்டாடப்படுகிறது என்கிறது புராண கதைகள்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button