திருவிழாக்கள்பூஜைகள்

சரஸ்வதி பூஜை நாளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

Saraswati pooja

கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்தால் போதும் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் சரஸ்வதி ஆவாஹணம் செய்து வழிபடுகின்றனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் நாடு முழுவதும் உள்ள பிரபல சரஸ்வதி கோவில்களை தரிசனம் செய்வோம். கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. அன்னை சரஸ்வதி நாவினில் குடியிருக்கிறார். எனவேதான் நாம் பேசும் ஒவ்வொரு சொற்களையும் நிதானமாக பேச வேண்டும்.

சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும். கலைமகளுக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும். இன்னும் சரஸ்வதி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். அன்னையின் அருளைப் பெறுங்கள்.

கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணி

சரஸ் என்றால் பொய்கை என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள். கலைமகளின் திருக்கரத்தில் திகழும் மணிமாலையை அட்ச மாலை எனப் போற்றுவர். தான் மொழி வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி.

சரஸ்வதியின் வாகனம்

சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை. இது, கல்வியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது. தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம்.

சரஸ்வதியின் கொடி

பண்டைய காலத்தில் அரசர்களும் புலவர்களும் மொழிவிவாதம் செய்யும்போது, அவர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் கொடியும் இணைக்கப்பட்டிருக்குமாம். இதை சாரதா த்வஜம் என்பர். இதில் சரஸ்வதிதேவியின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும். சில நூல்கள், கலைவாணியின் வாகனமாக மயிலைக் குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும் மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு.

சரஸ்வதிக்கு பாரதி என்ற பெயர்

வேதங்கள் சரஸ்வதிதேவியை துதிகளின் வடிவாக `இடா’ என்றும், அறிவின் விளக்கமாக `பாரதி’ என்ற பெயரிலும், ஞான வடிவில் திகழும் அவளை `சரஸ்வதி’ என்றும் போற்றுகின்றன. இடாதேவியா அவள் நம் வீடுகளில் வீற்றிருந்து மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கிறாள். பாரதி தேவி என்ற பெயரில் மக்களுக்கு கல்வி-கலை ஞானத்தை அருள்கிறாள். சரஸ்வதிதேவி வேள்விகளைக் காப்பதுடன் சகல செல்வத்தையும் நம்முடைய கல்வியின் மூலம் கிடைக்க அருள் செய்கிறாள் என்கின்றன ஞான நூல்கள்.

பூரணக் கலசம்

சில கோயில்களில் கலைவாணி கரத்தில் பூரணக் கலசத்துடன் திகழ்வாள். அவள் நதியின் வடிவிலும் அருள்பாலிப்பவள் ஆதலால், கரத்தில் பூரணக் கலசத்துடன் அவள் அருள்வதாக ஐதிகம். கலைவாணியை வாக்தேவியாகவும் போற்றுகின்றன புராணங்கள். வாக்தேவியானவள் மூன்று சந்தியா காலங்களில் காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திகழ்கிறாளாம். இந்த மூன்று திருவடிவுடன் திருவீழிமிழலை தலத்தில் அவள் ஈசனை வழிபட்டதாக, அவ்வூர் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள மூன்று லிங்கங்களை முறையே காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

கலைமகளின் வீணை

கலைவாணி ஏந்தியிருக்கும் வீணைக்கு கச்சபி என்று பெயர். அதை அருளியது சிவபெருமான் என்பர். தேவியின் கரங்களில் இருக்கும் வீணையும் சுவடியும் கல்வியின் மேன்மையையும் கலைகளில் திறமையையும் அருள்பவள் என்பதை உணர்த்துகின்றன.

சரஸ்வதிக்கு தனிக் கோயில்

தமிழகத்தில் கூத்தனூர் போன்று ஆந்திர மாநிலத்தில், பாசரா என்ற திருத்தலத்தில் தனிக் கோயிலில் அருள்கிறாள் சரஸ்வதி. குமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக் கோயிலில் அருள் புரியும் சரஸ்வதிதேவியை கவிச் சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு. தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் கருவறைக் கோட்டத்தில் மேலிரு கரங்களில் அட்சமாலை சுவடியும், கீழிரு கரங்களில் அபய, ஊரு முத்திரைகளுமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சித் தருகிறாள் சரஸ்வதிதேவி.

வாணியம்பாடி

பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். வேலூர் – கிருஷ்ணகிரி பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.

வேதாரண்யம்

வேதாரண்யம் வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.

தெலுங்கானா

தெலுங்கானாவில் ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. வர்கல் என்ற கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய பேர் தங்களின் குழந்தைகளின் வித்யாரம்பத்தை அங்கு செய்வார்கள். பாசர் வித்யா சரஸ்வதி கோவில் இது அடிலாபாத் ஜில்லாவில் உள்ளது. நிஜாம்பாத் செல்லும் அனைத்து இரயில்களும் இங்கு நிற்கும் ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில் வாரங்கால் மாவட்டத்தில் உள்ளது. காளீஸ்வரம் மகா சரஸ்வதி கோவில் சிறப்பு வாய்ந்த கோவில்.

கர்நாடகா

கர்நாடகா சிருங்கேரி சாரதாதேவி பீடம் உள்ளது. சாரதா தேவி கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. ஆதி சங்கரர் உருவாக்கிய இந்த பீடத்தில் அன்னை சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.
கேரளா சரஸ்வதி கோவில்

கேரளா

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் தட்சிண மூகாம்பிகா கோவில் உள்ளது. இது பிரபல சரஸ்வதி கோவில். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கும், கலைஞர்களின் கலை வளர்ச்சிக்கும், குழந்தைப்பேறுக்கும் அருள்புரியும் சரஸ்வதி தேவி கோவில் பனச்சிக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ளது. இந்த ஆலயம் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சிங்கவனம் நகருக்கருகில் அமைந்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சரஸ்வதி தேவியின் மதிய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

ஒட்டக்கூத்தர் பூஜித்த கூத்தனூர் சரஸ்வதி

சரஸ்வதிக்கென திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே பூந்தோட்டத்தில் சரஸ்வதி கோவில் உள்ளது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர் வந்துள்ளது. கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்யும் முறைகள்

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து வண்ணக் கோலங்கள் இட்டு அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையில் எளிய முறையில் மேடை அமைக்கலாம். சிலர், பாடப் புத்தகங்களை அடுக்கி மேடையாக அமைப்பார்கள். மூன்று அல்லது ஐந்து அடுக்குகள் அமையும் வண்ணம் புத்தகங்களால் மேடை அமைப்பது வழக்கம். புத்தகங்களை அடுக்கி அதன் மீது வெண்பட்டு விரித்து அலங்கரிப்பார்கள். இனி, பூஜை மேடையைச் சுற்றிலும் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக சரஸ்வதிதேவி படத்தை வைத்து பூஜைக்குத் தயாராக வேண்டும்.

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, அன்னை சரஸ்வதி தேவி படத்துக்குச் சந்தனக் குங்குமத் திலகமிட்டு, பூக்கள் சூட்டி அலங்கரிக்கலாம். அருகிலேயே பூஜைக்கான கலசம் வைத்து அதில் ஏலக்காய் முதலான வாசனைத் திரவியங்களைப் போட்டு (தங்க ஆபரணங்கள் முத்துக்கள் போன்றவற்றைப் போடுவதும் உண்டு), கலசத்தில் வாயில் மாவிலை தேங்காய் வைத்து வணங்கி, பூஜையைத் தொடங்க வேண்டும்.

மகாநவமி திருநாளான இந்தத் தினத்தில் பிள்ளைகளின் பாடப் புத்தகங்களையும், நம்முடைய அன்றாடப் பணிக்குத் தேவைப்படும் பொருள்களையும் அன்னையின் திருமுன் வைத்து வழிபடலாம். முதலில் `கணபதி குணநிதி வேண்டும் வரம் தரும் அருள்நிதி போற்றி’ என்று கூறி, முழுமுதற் தெய்வமாம் விநாயகரைத் தொழுது, நாம் மேற்கொள்ளப் போகும் சரஸ்வதிதேவிக்கான பூஜை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவேற அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கவேண்டும்.

அரிசியில் ஏன் குழந்தைகள் எழுதுகின்றனர்

தங்களுடைய குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைந்திட விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்த நாளின் போதோ அல்லது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவோ, தங்கள் குழந்தையுடன் இந்தக் கோவிலுக்கு வந்து பஞ்சாமிர்தம், பால்பாயசம் போன்றவற்றைப் படைத்து, தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். வீட்டிலேயே சரஸ்வதி படத்திற்கு முன்பாகவும் குழந்தைகளை எழுத வைக்கலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button