ஆலயங்கள்

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்

Papanasam Sorimuthu Ayyanar Temple

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். காண்பதற்கு மிக அழகாக இடத்தில் நதி மீது அமர்ந்துள்ள இந்த ஆலயம் அப்பகுதி மக்களின் குல தெய்வம் ஆக விளங்குகின்றது. இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது. இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

தல வரலாறு

தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.

அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.

இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.

இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.

அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர். இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.

அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங்களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர்.

ஆடி அமாவாசை திருவிழா

அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.

செருப்பு காணிக்கை

குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.

மணி விழுங்கி மரம்

இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.

பயணம்

நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கார் மற்றும் பைக்கில் மிக எளிமையாக இவ்விடத்தை அடையளாம். மதுரையிலிருந்து காரில் அல்லது பேருந்தில் ஒரே நாளில் இங்கு வந்து குளியல் போட்டு சொரிமுத்து அய்யனாரை வணங்கி மீண்டும் திரும்பலாம். முக்கியமாக பாபநாசம் வருபவர்கள் இங்கும் ஒரு விசிட் அடிக்க மறக்க வேண்டாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button